மந்தநிலைக்கான அடிப்படைக் காரணம்:
2019ஆம் ஆண்டின் இறுதியில் நிலவிய மந்தமான பொருளாதாரம், மிகப்பெரிய அளவில் அபாயமாக உருவெடுத்துள்ளது. தற்போதுள்ள, பொருளாதார மந்தநிலை, இயல்பானதா அல்லது கட்டமைப்பிலுள்ள பிழையால் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவாதமே, 2019இன் இரண்டாம் பாதியை பெருமளவு ஆக்கிரமித்திருந்தது.
மின்சார உற்பத்தி, பெட்ரோலிய நுகர்வு புள்ளிவிவரங்கள், தொழில்துறை உற்பத்தி, மின்னணு பண பரிமாற்றம் போல ஒவ்வொரு முக்கியமான மாதாந்திர குறிகாட்டியும் நாட்டின் மந்தநிலையை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதையே குறிக்கிறது. ஆனால், நாட்டின் ஒவ்வொரு பிரிவிலும் அதிகரித்துள்ள கடனே, பொருளாதார மந்தநிலைக்கான அடிப்படைக் காரணம் என்பதை பெரும்பாலானோர் தவறவிட்டனர்.
கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் மாறுதல் அடையாமல் நிலையான விலையை அடைந்துள்ளது அரசுக்கு சற்று ஆறுதலைத் தருகிறது. இது ரூபாய் மதிப்பு மேலும் சரியாமல் தடுக்க உதவியது. புதிய நிறுவனங்களுக்கு 15 சதவிகிதம் என்ற வரி குறைப்பு மற்றும் மின்சார வாகனங்களுக்கு ரூ.1.5 லட்சம் கூடுதல் வரி விலக்கு போன்ற நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தை மீட்க, அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது.
பெருகிவரும் வங்கி பிரச்னைகள்
2019ஆம் ஆண்டில் வங்கி தொடர்பான பிரச்னைகள் அதிகரித்த வண்ணமே இருந்தன. அரசின் மூலதனத்தால் பொதுத் துறை வங்கிகள் பலமாகவே உள்ளது. குறிப்பாக, 2019 மே மாத தேர்தலுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட ரூ.70,000 கோடி மறு மூலதனமும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. ஆண்டின் இறுதியில் பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் ஓரளவு குறைந்திருந்தாலும், இது ஒரு தற்காலிக நிகழ்வாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
ஏனென்றால், கடன் வழங்குவதில் தற்போது பொதுத் துறை வங்கிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கின்றன அல்லது பெரும்பாலும் கடன் கொடுக்கவே அவர்கள் தயாராக இல்லை. வங்கிகளின் இந்த முடிவு, வரும் காலங்களில் சரிவை அதிகப்படுத்தலாம்.
முத்ரா கடன்களில் அதிகரித்துள்ள வாராக்கடன்கள், வருங்காலத்தில் பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன்கள் அதிகரிப்பதையே குறிக்கிறது. மேலும், பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன்கள் 11.2 சதவிகிதத்திலிருந்து 9.1 சதவிகிதமாக குறைந்துள்ளபோதும், தனியார் வங்கிகளின் வாராக்கடன்கள் அதிகரித்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வங்கித் துறையிலுள்ள நெருக்கடிகளைத் தீர்க்க பல்வேறு யுக்திகளையும் அரசு முயன்றுள்ளது.
அதன்படி, 10 பொதுத் துறை வங்கிகளை நான்கு நிறுவனங்களாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது; இதன்மூலம் வங்கிகளின் எண்ணிக்கை குறைகிறது. ஏறக்குறைய 25 சதவிகிதம் வாராக்கடன்கள் கொண்ட ஐ.டி.பி.ஐ. வங்கி, எல்.ஐ.சி.யால் கையகப்படுத்தப்பட்டது; எல்ஐசியின் அளவு காரணமாக ஐ.டி.பி.ஐ. வங்கி காப்பாற்றப்படலாம். துர்பாக்கியமாக, இத்தகைய குறுகிய காலத் தீர்வுகள் எதுவுமே பொருளாதார சிக்கலைத் தீர்க்கப்போவதில்லை.
வங்கித் துறையின் ஆரோக்கியம் குறித்து அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வங்கித் துறையில் கடன் தொடர்பாக தற்போது எதுவும் பிரச்னைகள் இல்லை என்றாலும், வங்கிகள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் பொருளாதார மந்தநிலையால் ஏற்படும் அபாயங்களை எதிர்கொள்ள அவை தயாராக இருக்கும்.
நீண்டகாலமாக வங்கிகள் சந்தித்துவரும் இந்தச் சிக்கல்களின் முக்கிய விளைவு என்னவென்றால், வளர்ந்துவரும் சந்தைகளிலேயே இந்திய வங்கிகளுக்கு மட்டும்தான் பலவீனமான நிதி ஆரோக்கியம் உள்ளன. கடந்த ஆண்டு, இந்திய வங்கிகளைவிட கிரீஸ் (42), ரஷ்யா (10.1) என இரண்டு நாடுகளில் மட்டுமே வாராக்கடன்கள் அதிகமாக இருந்தன.
இதனால், வங்கிகள் விளிம்பில் இருப்பதாகக் கூறவில்லை; மாறாக, வளர்ந்துவரும் பெரும்பாலான சந்தைகளைவிட நமது வங்கிகள் ஆரோக்கியமானதாகவே உள்ளது. ஏனெனில் வளர்ந்துவரும் சந்தைகளில் நம் வங்கிகள்தான் மிகக் குறைந்த கடன்களைக் கொண்டுள்ளன. இந்திய வங்கிகளின் 25 சதவிகித மூலதனம், அரசிடமோ அல்லது ரிசர்வ் வங்கியுடனோ இருக்கின்றன.
இருப்பினும், மோசமான வங்கி நெருக்கடி, நமது பொருளாதாரத்தை பாதிக்கிறது. வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் குறைந்துள்ளதால், வெளிநாட்டிலிருந்து வாங்கப்படும் கடன் நடப்பு நிதியாண்டில் சுமார் ரூ. 70,000 கோடியாக அதிகரித்துள்ளது.
வங்கிசாரா நிதி நிறுவன (என்.பி.எஃப்.சி.) நெருக்கடிகள் :
வங்கி சாரா நிதித் துறை (என்.பி.எஃப்.சி.) இந்தாண்டு பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. என்.பி.எஃப்.சி. கடன்களில் சுமார் 40 சதவிகிதம், ஆட்டோமொபைல் துறையின் வெவ்வேறு பிரிவுகளுடனும், அது சார்ந்த கொள்முதலுடனும் தொடர்புடையது.
கடந்த 3 ஆண்டுகளில், பொருளாதாரம் பெரும் சரிவை சந்திக்காததற்கு காரணம், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன்கள் அதிகரித்துள்ளதே. மார்ச் 2018 இறுதியில், ரூ.30.85 லட்சம் கோடியாக இருந்த வங்கிசாரா நிதி நிறுவனங்களின் கடன், 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.32.57 லட்சம் கோடியாக உயர்ந்தது. பல்வேறு காரணங்களால், மார்ச் 2018இல் 26.8 சதவிகிதமாக இருந்த வளர்ச்சி, செப்டம்பர் 2019இல் 13.2 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது.
வங்கி திவால் சட்டம், நடுவர் சட்டம், தொழில் துறை தொடர்பான பல்வேறு சட்டங்களை ஒருங்கிணைத்தல் என, இந்த ஆண்டு பல வரவேற்கத்தக்க சட்டத்திருத்தங்கள் காணப்பட்டன. மேலும், தொலைத்தொடர்புத் துறை பெரும் ஆபத்தில் உள்ளதை, இந்தாண்டு வெளிச்சம்போட்டுக்காட்டியது.
தொலைத்தொடர்பு துறையில் அதிகரித்துள்ள போட்டி, அரசின் கோரிக்கைகள், இத்துறையை பெரும் கடனில் மூழ்கச் செய்தது. நாட்டில் தொலைத்தொடர்பு புரட்சியால் நுகர்வோர் பயனடைந்துள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. மேலும், சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயாக ரூ.92,000 கோடி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்ற சமீபத்திய உச்ச நீதிமன்ற உத்தரவு, தொலைத்தொடர்பு நிறுவனங்களை திவால் நிலைக்கு அருகில் தள்ளியுள்ளது.
மந்தநிலை தொடர்ந்தால், பின்னர் அது மிக நீண்ட கட்டமைப்பு மந்தநிலையாக மாறும். இதுபோன்ற நேரத்தில் பல்வேறு பிரிவுகளிலிருந்தும் பல கோரிக்கைகள் எழும். மத்திய அரசு இதுவரை எந்த அழுத்தத்திற்கும் உள்ளாகாமல், சிறப்பாக செயல்பட்டுள்ளது.
பொருளாதார மந்தநிலை காரணமாக சரக்கு மற்றும் சேவை வரி வசூலைக் குறைந்துள்ளதன் பொருள், மத்திய – மாநில அரசுகள் நிறுவனங்களை வரிக்காக கசக்கிப் பிழிய முயலுவதைக் காட்டுகிறது. இது ஒரு பெரிய, பொதுவான தவறு. இதற்குப் பதிலாக, அரசு அதன் செலவினங்களைக் குறைத்து எச்சரிக்கையுடன் முதலீடு செய்தால், அது எதிர்காலத்தில் வளர்ச்சியைத் தூண்ட உதவும்.
பல மாநில அரசுகள் மோசமான நிதிநிலையில் இருக்கின்றன; ஏனெனில் அவை தேவையற்ற மானியங்களின் மூலம் வளங்களை மொத்தமாக வீணடிப்பதிலிருந்து விலக மறுக்கிறது. இதனால் எதிர்கால தேவைகளுக்காக புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது என்பது மத்திய அரசின் முழுப்பொறுப்பாகிறது. சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களை அதிகரிக்க வேண்டும் என்று மாநிலங்கள் தரும் அழுத்தத்திற்கு மத்திய அரசு விழுந்துவிடக்கூடாது, ஏனெனில் இது சிக்கலை மோசமாக்கும். அதற்குப் பதிலாக, மாநிலங்களின் தேவையற்ற மானியங்களைக் குறைக்க அறிவுறுத்த வேண்டும்.
இந்தியா தற்போது, புதிய முறையில் வளர்ச்சி அடைய மாற்று வழியை சிந்திக்க வேண்டும். அப்போதுதான் உலகமயமாக்கலுக்குப் பின் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ள முடியும். வரலாற்று ரீதியாக, இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியின் ஒவ்வொரு புதிய கட்டமும் வளர்ச்சிக்கு புதிய தொழில்கள் தேவை என்பதையே உணர்த்தியுள்ளன. 1970களிலும் 1980களிலும் கனரக தொழில் துறையால் வளர்ச்சி ஏற்பட்டது. 1990களிலும் 2000த்திலும் தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு, ஊடகங்களால் இந்திய வளர்ச்சிபெற்றது.
இந்தப் பிரிவுகளின் பொருளாதார வளர்ச்சி வங்கிகளின் விரிவாக்கத்துடன் இணைந்து, பெரும் வளர்ச்சிக்கு வித்திட்டது. இது பொருளாதாரத்தை ஏற்ற பாதைக்கு உந்து சக்தியாக இருந்தது. மேலும், அரசுகளுக்கு புதிய வருவாயையும் மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியது. இந்தத் துறைகள் தற்போது மந்தமடைந்துவருவதால், அரசு ஒரு புதிய தொழிற் துறையை ஆதரிப்பது அவசியம். ஆனால், அத்தொழில் துறையினர் தயாரிக்கும் பொருள்கள், சர்வதேச அளவில் போட்டிபோடுவதாக இருக்க வேண்டும்.
மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
கடன்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளதால், இருக்கும் நேரத்தை வீணாக்காமல் மத்திய – மாநில அரசுகள் புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும். மத்திய அரசு மாதத்திற்கு சுமார் ரூ.1 லட்சம் கோடி என்ற விகிதத்திலும், அனைத்து மாநிலங்களும் மாதத்திற்கு ரூ.50,000 கோடி என்ற விகிதத்தில் கடன் வாங்குகின்றன. இதில், அரசு நிறுவனங்கள், அறக்கட்டளைகள், நிறுவனங்களின் கடன்கள் சேர்க்கப்படவில்லை.
கடன்களில் பெரும்பாலானவை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற பொது நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என்பதால் அரசுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மொத்த அரசு கடனில் சுமார் 10 சதவிகிதம் மட்டுமே வெளிநாட்டவர்கள் அல்லது தனிநபர்களுக்குச் சொந்தமானது. இதனால் ஏதேனும் தவறு நடந்தால், நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.
அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள், உற்பத்தித் துறைக்கு வருவதால் அவர்களுக்குத் தேவையான வேலையை உருவாக்க வேண்டியது அவசியம். வாங்கும் கடனை, உற்பத்தியையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தாத மானியங்களுக்கு செலவிடுவதைத் தவிர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எல்லாவற்றையும் அரசு இலவசமாக வழங்குவது சாத்தியமில்லை. அதற்குப் பதில், புதிய தொழில்களை வளர ஊக்குவிப்பதற்கான சூழலை உருவாக்க எதிர்காலத்திற்கான முதலீட்டில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இதனால் போதுமான எண்ணிக்கையிலான வேலைகள் உருவாக்கப்படும்.
முதலில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மின்சார வாகனத் துறையை ஊக்குவிப்பது ஒரு நல்ல தொடக்கப் புள்ளியாகும்.
அரசு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மானியங்களுக்கான செலவினங்களை நிறுத்துவது அல்லது கடுமையாகக் குறைப்பது, சேமித்த பணத்தில் தீவிர சீர்த்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் – வங்கிகளின் வாராக்கடன்களைக் கையகப்படுத்தி, வங்கிகள் செயல்படும் முறையை கடுமையாக மாற்றுவதன் மூலம் பொருளாதாரம் விரைவாக மீட்க முடியும். தற்போதுள்ள மந்தநிலையில், இத்தகைய கடும் சீர்த்திருத்த நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசுக்கு ரூ.10-12 லட்சம் கோடி செலவாகும். ஆனால், இந்த முக்கியமான தருணத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான முக்கிய நடவடிக்கையாக, இது இருக்கலாம். இந்தக் கடன்களை அரசால் மீட்டெடுக்க முடியும். எனினும். ஆனால், இத்தகைய முக்கிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள, அரசுக்கு மிகப்பெரிய துணிவு தேவைப்படும்.
அரசின் ஆதரவு தேவைப்படும் ஒரு முக்கியமான துறை தொலைத் தொடர்பு. ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை (5ஜி) போன்ற எதிர்கால தொழில்நுட்ப தேவைகளில் முதலீடு செய்ய அரசு மானியம் வழங்க வேண்டும். இது இந்திய நிறுவனங்கள் போட்டியுடன் இருக்கவும், நீண்டகால நோக்கில் அதிக உற்பத்தி செய்யவும் உதவும்.
முத்ரா கடன்கள், நுண்நிதி (மைக்ரோ பைனான்ஸ்) கடன்கள் போன்ற திட்டங்களுக்கு பணத்தை வீணாக்குவதைத் தவிர்த்து, சீனாவைப் போல எதிர்கால தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்கள், அறிவுசார் சொத்துகளை முதலீடு செய்பவர்கள், செயற்கை நுண்ணறிவு, இயந்திர நுட்பம் கற்றல், மேம்பட்ட மருத்துவ அறிவியல் போன்றவற்றிற்கு நிதியளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
நெருக்கடி ஒருபோதும் வீணடிக்கப்படக்கூடாது. எனவே, அரசு (மத்திய, மாநில அல்லது உள்ளாட்சி அமைப்புகள்) உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட பலன் தரக்கூடிய துறைகளுக்கு (குறிப்பாக அரசு சேவைகள் மற்றும் கல்வி முறைமையில்) நிதியை ஒதுக்குவதே தற்போது செய்யவேண்டிய ஒன்று.