வட மாநிலத்தில் இருந்து வந்த ரயிலில் 22 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் கடத்தல்காரார்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கான போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ராமநாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வடமாநிலத்தில் இருந்து விருதுநகருக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஜாக்குலின், சிறப்பு இன்ஸ்பெக்டர்கள் பெரிய கருப்பன் மற்றும் காவல்துறையினர் விருதுநகருக்கு விரைந்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து விருதுநகர் ரயில் நிலையத்தில் வடமாநிலத்தில் இருந்து வந்த ரயிலை சோதனை செய்த போது எஸ்-1 பெட்டி கழிப்பறை அருகே சந்தேகப்படும் படி இரண்டு பைகள் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த பையை சோதனை செய்த போது சுமார் 22 கிலோ 600 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் ராமநாதபுரத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கஞ்சாவை கடத்தியது யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 2 லட்சத்து 22 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.