நேற்று வானிலை ஆய்வு மையம், மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழையும், தென் தமிழக மாவட்டங்கள், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று ( பிப்.12 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் காயத்ரி அறிவித்துள்ளார். இருப்பினும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் திருப்புதல் தேர்வு நடைபெறுவதால் பள்ளிக்கு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் மழை காரணமாக இன்று 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நேற்று முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்று ஒருநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேர்வு நடைபெறும் பள்ளி மாணவர்கள் மட்டும் கட்டாயம் பள்ளிகளுக்கு வரவேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.