மயிலாடுதுறை- காரைக்குடி இடையில் இயக்கப்படும் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் பயண நேரம் 4 மணி நேரமாக குறைந்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முன்னதாக திருவாரூர்- காரைக்குடி இடையில் அகல ரயில்பாதை மாற்றும் பணிகளானது நடந்து வந்ததால் அந்த வழித்தடத்தில் கடந்த 7 வருடங்களாக ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 2019ம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி ரயில் இயக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட ரயில் சேவை மீண்டும் கடந்த வருடம் ஆகஸ்ட் 4 ஆம் தேதியில் இருந்து இயக்கப்படுகிறது.
இந்த ரயிலானது மொத்தம் 20 நிலையங்களில் நின்று செல்லும். திருவாரூர்- காரைக்குடி இடையில் 73 ரயில்வே கிராஸிங்குகளில் கேட் கீப்பர்கள் இல்லாத காரணத்தால் ரயில் இயக்கம் தாமதமானது. இதன் காரணமாக திருவாரூரிலிருந்து, காரைக்குடிக்கு பயண நேரமானது 6 மணி நேரமாக இருந்தது. இந்த நிலையில் 73 ரயில்வே கிராஸிங்குகளிலும் முன்னாள் படை வீரர்களை கேட் கீப்பர்களாக ரயில்வே நிர்வாகம் நியமனம் செய்தது. அதனை தொடர்ந்து ரயில் வேகம் அதிகரிக்கப்பட்டு பயண நேரம் 4 மணி நேரமாக குறைந்ததால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.