அமெரிக்க அரசு, கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து லாரி ஓட்டுனர்கள் நடத்தும் போராட்டத்தை கனடா அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.
கனடாவில் எல்லையை கடந்து வரும் லாரி ஓட்டுனர்கள் கட்டாயமானாக கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. இதனை எதிர்த்து லாரி ஓட்டுனர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சுதந்திர அணிவகுப்பு என்னும் பெயரில் அந்நாட்டின் தலைநகரான ஒட்டாவாவில் போராட்டம் தொடங்கியது.
தற்போது நாடு முழுக்க இந்த போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக அமெரிக்க நாட்டின் டெட்ராய்ட் மற்றும் கனடாவின் வின்ஸ்டர் நகரங்களை இணைக்கக்கூடிய தூதர் பாலத்தை சூழ்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், இரண்டு வாரங்களாக தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அமெரிக்கா, லாரி ஓட்டுனர்களின் இந்த போராட்டத்தை கனடா அரசு தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது. இது பற்றி அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறை மந்திரி, கனடாவைச் சேர்ந்த மந்திரிகளை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.