ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களில் குறிப்பிட்டோருக்கு தபால் வாக்குகள் வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் கடந்த இரண்டு நாட்களாக தபால் வாக்குகள் கிடைக்காதவர்கள், அந்தந்த ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிட்டு தபால் வாக்குகள் கேட்டனர். இதனையடுத்து தபால் வாக்குகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அரசு ஊழியர்கள் 973 பேர், மாவட்டத்தின் பல இடங்களில் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். இதில் தபால் வாக்கு தேவை என 829 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 300 பேரின் தபால் வாக்குகள் காணவில்லை என ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் நேற்று தெரிவித்தனர். இதுகுறித்து அரசு ஊழியர்கள் புகார் கூறியதையடுத்து, திமுகவினர் கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரின் ஆலோசனையின்படி, கமுதி ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் ரவி, ஏற்கனவே போட்ட தபால் ஓட்டுகள் செல்லாது என அறிவித்து, பழைய தபால் வாக்கு பெட்டிகளை அகற்றி, நேற்று புதிதாக அனைவருக்கும் தபால் ஓட்டுகளை அளித்தார். அதனையடுத்து ஆறு மணி நேரமாக காத்திருந்த அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.