மின்சாரம் பாய்ந்து நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தோப்புபாளையம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான ரஞ்சித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இனியா என்ற மகள் உள்ளார். ரஞ்சித்துக்கு சமையல்காரரான பிரகதீஷ் என்ற நண்பர் இருந்துள்ளார். இந்நிலையில் மதிய நேரத்தில் ரஞ்சித்தின் வீட்டிற்கு சென்ற பிரகதீஷ் இனியாவை கையில் தூக்கி வைத்து கொண்டு வேடிக்கை காட்டி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரகதீஷின் கை வீட்டிற்கு அருகில் சென்ற உயர் அழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் மின்சாரம் தாக்கி பிரகதீஷ் தூக்கி வீசப்பட்டுள்ளார்.
அவரது கையில் இருந்த குழந்தை கீழே விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ரஞ்சித் தனது நண்பரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது ரஞ்சித் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ரஞ்சித்தும், பிரகதீஷும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.