இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி கணவன்-மனைவி படுகாயமடைந்ததில் சிகிச்சை பலனின்றி கணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள ஆர்.புதுப்பட்டியில் மாரப்பன் (63) என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு விஜயா (57) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் மாரப்பன் மற்றும் விஜயா இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக கணவன்-மனைவியை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மாரப்பன் பரிதாபமாக இறந்துள்ளார். தற்போது விஜயாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அறிந்த நாமகிரிப்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரப்பனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.