இந்திய தேர்தல் ஆணையம் 5 மாநில தேர்தல் பிரச்சாரம் தொடர்பான கூடுதல் தளர்வுகளை வழங்கி உத்தரவு அளித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 3-வது அலையின் பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மாநில அரசு தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலானது கோவா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர்,உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறுகிறது. இதில் 7 கட்டங்களாக உத்திர பிரதேசத்திலும், 2 கட்டங்களாக மணிப்பூர் மாநிலத்திலும் மற்றும் ஒரே கட்டமாக உத்தரகாண்ட்,பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களின் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் முதற்கட்ட தேர்தலாக கடந்த 10ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடைபெற்ற நிலையில், வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்திலும் நடைபெற உள்ளது. நாளை பிப்ரவரி 14 பஞ்சாப், உத்திரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து மார்ச் 10 ல் பதிவான வாக்குகள் எண்ணபட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மற்றும் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. ஆனால் கொரோனா 3-வது அலை பரவி வருவதால் இதற்கு கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்திருந்தது.தற்போது இதன் வேகம் குறைந்து வரும் நிலையில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி இந்த கட்டுப்பாட்டில் இருந்து சில தளர்வுகளை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
இந்நிலையில் நேற்று கூடுதல் தளர்வுகளையும் இந்திய தேர்தல் ஆணை அளித்துள்ளது. அதன்படி பிரச்சாரத்திற்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டது. மேலும் திறந்த வெளி பிரச்சாரங்களில் அதிகபட்சம் 50% கொள்ளளவு வரையிலான மக்கள் பங்கேற்கலாம் எனவும் பாதயாத்திரை உள்ளிட்ட நிகழ்ச்சிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு, விதிகளை பின்பற்றி நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.