கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்விளை பகுதியில் மிதுன் என்பவர் வசித்து வருகிறார். தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வந்த இவர் கொரோனா காரணமாக ஆன்லைனில் படித்து வந்துள்ளார். கடந்த 7ம் தேதி மிதுன் வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறி தனது பைக்கில் சென்றுள்ளார். இதையடுத்து மிதுன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பததால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மிதுன் அறையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது மிதுன் பயன்படுத்தி வந்த ஐபோனை ஆய்வு மேற்கொண்டபோது, வலியில்லாமல் தற்கொலை செய்து கொள்வது குறித்த வீடியோக்கள் இருந்ததைக் பார்த்து காவல்த்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரித்தபோது, மிதுன் சிறு வயதில் இருந்தே அதிகமான த்ரில்லர் புத்தகங்களைத் தேடிப் படித்து வந்துள்ளார்.
இதன் காரணமாக தன்னை ஒரு த்ரில்லர் கதாபாத்திரமாக மிதுன் நினைத்துக் கொண்டு உள்ளார். இவ்வாறு மகனின் செயலை பார்த்து பெற்றோர்கள் படிப்பில் கவனம் செலுத்தும்படி அவரை திட்டியுள்ளனர். இதனால் மிதுன் வாழப்பிடிக்கவில்லை என்று நண்பர்களிடம் கூறியுள்ளார். இந்நிலையில் மிதுன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதையடுத்து காவல்துறையினர் மிதுனை தேடி வந்த நிலையில் குளச்சல் கடற்கரை பகுதியில் இருந்த அவரது பைக்கை மீட்டனர்.
இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் மீனவர்கள் உதவியுடன் மிதுனை கடல் பகுதியில் தேடிப் பார்த்தனர். அப்போது கடற்கரையில் இருந்த கற்களுக்கு இடையில் இருந்த மிதுனின் சடலத்தை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இவ்வாறு த்ரில்லர் கதைகளுக்கு அடிமையான வாலிபர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..