தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழிகாட்டுதல்களை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா பரவல் மேலும் குறைந்து வருவதால் நர்சரி, மழலையர் விளையாட்டு பள்ளிகளை திறக்கவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை (பிப்…14) ஆம் தேதி முதல் தொடங்க வேண்டுமென மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இது குறித்து மருத்துவக்கல்வி இயக்ககம் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 14 (நாளை) முதல் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும். அதன்பின் உணவு கூடங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது.
அதனை தொடர்ந்து நூலகத்தில் மாணவர்கள் கூட்டமாக அமருவதை தவிர்க்க வேண்டும். மேலும் கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. கல்லூரிக்கு வருகை புரியும் அனைத்து மாணவர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அதன்பின் அரசு பள்ளி மாணவர்களிடம் கல்விக் கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம், உணவு உட்பட விடுதி கட்டணம், புத்தகங்கள், வெள்ளை அங்கி, ஸ்டெதஸ்கோப், பல்கலை பதிவு கட்டணம், காப்பீடு போன்ற கட்டணங்கள் ஏதும் வசூலிக்க கூடாது என்று மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.