கென்யா நாட்டின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்காவின் மகள் ரோஸ்மேரி ஒடிங்காவுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு 39 வயதில் திடீரென்று மூளையில் ரத்தநாள பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ரோஸ்மேரி ஒடிங்காவுக்கு கண் பார்வையானது பாதிக்கப்பட்டது. இதனால் அவருக்கு தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பலமுறை சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவருக்கு பார்வை திரும்ப கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவின் ஆயுர்வேதத்தின் சிறப்பை அறிந்த ரைலா ஒடிங்கா, கூத்தாட்டுக்குளம் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத மருத்துவமனைக்கு தனது மகளை சிகிச்சைக்காக அனுப்பினார்.
இதையடுத்து 2019ல் அங்கு ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெற்ற பிறகு பார்வை மேம்பட்டதும் ரோஸ்மேரி அவரது வீட்டுக்கு திரும்பினார். அதன்பின் ஆயுர்வேதம் மருந்துகள் தொடர்ந்து எடுத்துக் கொண்ட ரோஸ்மேரி ஒடிங்காவுக்கு இழந்த பார்வை மீண்டும் கிடைத்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த ரோஸ்மேரி, கென்யா நாட்டின் தொலைகாட்சிகளில் இந்தியாவின் ஆயுர்வேதம் மருத்துவ முறையால் தனது பார்வை பெற்ற விதத்தை விளக்கி கூறினார்.
இவ்வாறு இழந்த பார்வையை மீண்டும் கிடைக்க காரணமான இந்திய மருத்துவத்தின் அற்புதத்தை பல்வேறு உலக நாடுகள் உணர இது காரணமாக இருக்கிறது. தற்போது மகளுக்கு மேலும் 3 வாரம் சிகிச்சை பெற, ரைலா ஒடிங்கா குடும்பத்துடன் நேற்று முன்தினம் கூத்தாட்டுக்குளம் வந்தார். அப்போது அவரை ஸ்ரீதரீயம் தலைமை மருத்துவர் டாக்டர் நாராயணன் நம்பூதிரி, துணைத் தலைவர் ஹரிநம்பூதிரி, சி.இ.ஓ., பிஜூநம்பூதிரி ஆகியோர் வரவேற்றனர். இவ்வாறு மகளுக்கு பார்வை கிடைக்க காரணமான டாக்டர் நாராயணன் நம்பூதிரிக்கு, ரைலா ஒடிங்கா நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.