வீட்டின் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேங்கிக்கால் பகுதியில் சிவசங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு பச்சையம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பச்சையம்மாள் வேலூரில் உள்ள அவரது தம்பி வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டின் எதிர் வீட்டில் வசிப்பவர் பச்சையம்மாளை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
அதன்பின் பச்சையம்மாள் வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 18 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது பச்சையம்மாளுக்கு தெரியவந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் இருக்குமென கூறப்படுகிறது. இது குறித்து பச்சையம்மாள் திருவண்ணாமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தங்கநகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.