திருச்சி- மயிலாடுதுறை இடையே பள்ளி, கல்லூரி மாணவர்களும், அரசு அலுலகங்களில் பணிபுரிந்து வருவோரும் பயணம் மேற்கொள்ளும் வகையில் பயணிகள் ரயிலை காலை, மாலை நேரத்தில் இயக்க வேண்டும் என்று தஞ்சாவூர் – திருச்சி ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அந்த சங்கத்தின் செயலாளர் ஜீவக்குமார், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில், கொரோனா ஊரடங்குக்கு முன்பு இயக்கப்பட்ட திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண்-56824) காலை நேரத்திலும், அதே போன்று மயிலாடுதுறை- திருச்சி ரயில் (வண்டி எண் 56825) மாலை நேரத்திலும் இயக்கப்பட்டதன் மூலமமாக தினசரி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு, தனியார் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்லும் ஆயிரக்கணக்கானோர் இந்த ரயிலில் திருச்சியில் தொடங்கி, பூதலூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை வழியாக மயிலாடுதுறை வரை பயணம் மேற்கொண்டனர்.
முன்பாக கொரோனா ஊரடங்கின்போது இந்த ரயில்கள் நிறுத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கு தளர்வின் போது பல்வேறு பயணிகள் ரயில்கள், சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வரும்போது, இந்த இரு ரயில்கள் மட்டும் இதுவரையிலும் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் தினசரி கூடுதல் தொகையையும், நேரத்தையும் செலவிட்டு பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டியிருப்பதால், பொருளாதார ரீதியாக ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே போன்று ரயில்களில் முன்பிருந்த மாதாந்திர சீசன் கட்டணத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு ஜீவக்குமார் மனு அனுப்பியுள்ளார்.