தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கார்டு தாரர்களுக்கு மலிவு விலையில் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு கொள்முதலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகவும், தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது.
அந்த பொங்கல் பரிசு தொகுப்பில் அரிசி வெல்லம் போன்ற பொருட்கள் மக்கள் பயன்படுத்தும் பக்குவத்தில் இல்லை என்று பொதுமக்கள் கூறினர். இதையடுத்து தற்போது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கீழ்மாம்பட்டு கிராமத்திலுள்ள ரேஷன் கடையில் இந்த மாதம் வழங்கப்பட்ட பொருட்களில் புழு, வண்டுகள், எலி கழிவுகள், கோழி இறகுகள் உள்ளிட்டவை இருந்ததாக ரேஷன் அட்டைதாரர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக அதிருப்தி அடைந்த பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களின் அளவும் குறைவாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். தரமற்ற அரிசியை ரேஷன் கடையில் வழங்கும்போது, ஏன் என்று கேள்வி எழுப்பினால் விருப்பம் இருந்தால் வாங்கி செல்லுங்கள் என்று கடை ஊழியர் பதிலளிக்கின்றனர் என்று பொதுமக்கள் கூறினர். ஆகவே ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குபவர்களும் மனிதர்கள் தான் என்பதை மனதில் வைத்துக் கொண்டு தரமான பொருட்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.