புதுச்சேரி வில்லியனூர் அடுத்த பெரம்பை கிராமத்தில் மாரியம்மன் கோவில் ஒன்று இருக்கிறது. இங்கு உள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியில் நடக்கும் திருட்டு சம்பவங்களை குறைப்பதற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் பதிவாகியிருந்த கேமரா பதிவுகளை பார்த்தபோது, கடந்த 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை 1 மணியளவில் வெள்ளை உருவம் ஒன்று அங்கும், இங்கும் திரிவது போன்று பதிவாகியிருந்தது.
இதை பார்த்த சிலர் இரவு நேரத்தில் பேய் உலவுவதாக தெரிவித்து உள்ளனர். அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிலர் இருந்ததாகவும், அவர்கள்தான் ஆவியாக சுற்றுகின்றனர் என்றும் சிலர் வதந்தியைப் பரப்பினர். இதையடுத்து கண்காணிப்பு கேமரா பதிவில் தெரிந்தது பேய் அல்ல என்றும் அது இமேஜ் அலியாசிங் எனப்படும் புகைப்பட சிதைவு அல்லது புகைப்பட தகவலை பதிவு செய்ய கேமரா சென்சார் எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகியவற்றால் ஏற்படும் ஒருவித ஒளியியற் கணமாயம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் கேமராவில் இருக்கும் தூசு காரணமாக சில நேரங்களில் எதிர் திசையில் நடந்து செல்பவரின் பிரதிபலிப்பு, இதுபோன்ற உருவங்களை தோற்றுவிக்கும் என்றும் கூறப்படுகிறது.