தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் 3-வது அலை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31வரை விடுமுறை அறிவித்து ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் கொரோனா தடுப்பு விதிமுறைகளான இரவு நேர ஊரடங்கு மற்றும் வார கடைசி நாட்களில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளும் அமலில் இருந்தது. எனினும் சமீபத்தில் அனைத்து கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வு அளித்தல் மற்றும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.
அந்த வகையில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் அடிப்படையில் 1 -12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. எனினும் மழலையர் பள்ளி, நர்சரி பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மழலையர் பள்ளி, நர்சரி பள்ளிகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று அனைத்து பள்ளி நிர்வாக அதிகாரிகள், தலைமை செயலகத்திற்கு சென்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா நிலவரம் மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தளர்வுகளுடன் அமலில் உள்ள ஊரடங்கு மார்ச் 2 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 16ஆம் தேதி முதல் நர்சரி பள்ளிகள் (LKG, UKG) மற்றும் மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது..