Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

டீக்கடை வைப்பதற்கு…. என்ஜினீயர்கள் செய்த காரியம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

டீக்கடை வைப்பதற்காக பெண்களிடம் வழிப்பறி செய்து 14 பவுன் நகையை கொள்ளையடித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள வெப்படை, திருச்செங்கோடு, பள்ளிபாளையம் போன்ற பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் மர்மநபர்கள் நகையை பறித்து செல்வதாக அடிக்கடி எழுந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சுரோஜ்குமார் தாகூர் தனிப்படை அமைத்து உடனடியாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் திருச்செங்கோடு டி.எஸ்.பி. பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், வெற்றிவேல், மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இதனையடுத்து காவல்துறையினர் அந்தந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளிபாளையம் எஸ்பிபி கீழ் காலனி பாலம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த 2 பேரை நிறுத்தி விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் தேவனாங்குறிச்சி பகுதியை சேர்ந்த டேவிட் என்கிற ராஜு (வயது 24), பள்ளி பாளையத்தை சேர்ந்த அருண் (23) என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இவர்கள் தான் கடந்த 2 மாதங்களாக அப்பகுதியில் செல்லும் பெண்களிடம் வழிப்பறி செய்து இதுவரையிலும் 14 சவரன் நகைகளை பறித்தது உறுதியானது. இந்நிலையில் பொறியியல் பட்டதாரியான இவர்கள் திருச்செங்கோடு பகுதியில் டீக்கடை வைப்பதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக வாலிபர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |