சென்னை ஓட்டேரி பகுதியில் வசித்துவந்த 16 வயது நிரம்பிய சிறுமி ஃபாத்திமா பர்வீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 10ஆம் வகுப்புவரை படித்துவிட்டு நுங்கம்பாக்கத்தில் அவரது தந்தையுடன் சமோசா விற்பனை செய்துவந்துள்ளார்.
முத்தம் கேட்டு தொந்தரவு
இந்நிலையில் நேற்று இரவு சமோசா விற்பனை முடித்துவிட்டு வழக்கம்போல் வீட்டிற்குத் தனியாகச் சென்றுள்ளார். அப்போது அவ்வழியே சிறுமியின் வீட்டிற்கு அருகே வசித்துவரும் பஷீர் (24) என்ற நபர் குடிபோதையில் வந்து, சிறுமியிடம் தனக்கு முத்தம் கொடுக்குமாறு வரம்புமீறியுள்ளார். இதற்கு சிறுமி மறுப்பு தெரிவிக்கவே பஷீர் அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.
சிறுமி தற்கொலை முயற்சி
இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டிற்குச் சென்று ’வார்னிஷ்’ குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் மயங்கிய சிறுமியை அவரது உறவினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டுசென்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலக காலனி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பஷீரும் சிறுமியும் ஏற்கெனவே காதலித்ததாகவும், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற பஷீரை தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.