தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் அவர் கூறியதாவது, “என்னுடைய சொந்த தொகுதியான எடப்பாடியை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக நான் மாற்றியுள்ளேன். கடந்த 2011ஆம் ஆண்டு எந்த வசதிகளும் இல்லாமல் இருந்த எடப்பாடி தற்போது அனைத்து வசதிகளுடன் சிங்கப்பூர் போல மாறியுள்ளது. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் அவரது சொந்த தொகுதியான கொளத்தூரில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை.
கொளத்தூர் பகுதியில் உள்ள 12 தெருக்களில் 8 நாட்களாக மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. அதனை எந்த அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இதை சொன்னால் ஸ்டாலின் என்னை பார்த்து பச்சை பொய் பழனிச்சாமி என்று கூறுகிறார் ஸ்டாலின். வாய் ஜாலம் செய்து ஆட்சியை பிடித்தவர் ஸ்டாலின். அவர் கூறிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை என்பது அப்பட்டமான உண்மை. ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி என்றார்கள். ஆனால் எதுவும் தள்ளுபடி செய்யபடவில்லை.!” என்று கூறினார்.