தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் தோழமை கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள் அடிப்படை உறுப்பினர் & அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை, திருப்பூர், தஞ்சை, விழுப்புரம், காஞ்சி, தர்மபுரி, சேலம் போன்ற மாவட்டங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.