பாரிஸில் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாரிஸ் தலைநகரில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் கொரோனா விதிமுறைகள் குறித்து பொது மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அந்த போராட்டம் திடீரென கலவரமாக மாறியதால் கண்ணீர் புகை வீசி பொது மக்களை காவல்துறையினர் தடுக்க முயன்றனர். கனடாவில் போராட்டத்திற்கு அனுமதி அளிக்காததால் லாரி சாரதிகளின் ஆர்ப்பாட்டம் போல ஒரு கூட்டத்தை பாரிஸ் நகரிலும் நடத்துவதற்கு போராட்டக்காரர்கள் முயன்றுள்ளனர். அங்கு 7000 காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தாலும் பாரிஸ் நகரம் போர்க்களமாக மாறியது.
போராட்டம் நடக்கும் பகுதியில் இருந்த காவல்துறையினர் ஒருவர் கூறுகையில். “போராட்டக்காரர்கள் போக்குவரத்தை தடுப்பதற்கு தங்கள் வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அவர்களை வாகனம் இல்லாதவர்கள் ஆதரிக்கின்றனர். சட்டவிரோதமாக நடத்தப்படும் இந்த போராட்டம் நிறுத்தப்படும்” என அதிகாரிகள் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாரிஸ் நகரின் உள்ளே நுழைய முயன்ற 5 வாகன பேரணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதுடன் 200க்கும் மேற்பட்டோர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 54 பேர்களை பாரிஸ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இரவு 8 மணி வரையிலும் போராட்டத்தை நிறுத்தாததால் காவல்துறையினர் கண்ணீர் புகை வீசி கலைத்தனர்.
இதனை தொடர்ந்து சோம்ப்ஸ் எலிசே பகுதியில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் போராட்டகாரர்கள் அதிகமான வாகனங்களை சோம்ப்ஸ் எலிசே பகுதியில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் போலீசார் முன்னதாகவே நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து போராட்டக்காரர்களை காவல்துறையினர் கலைந்து போக கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை வீசி கலைத்தனர்.
மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியதில் காவல்துறையினர் காயமடைந்தனர். இதனால் 14 பேர் கைது செய்யப்பட்டதுடன் 337 பேர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.