பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், அதிகாரிகளும் தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்து விட்டதாகவும், மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துவிட்டதாகவும் கூறி வருகின்றனர். ஆனால் இதனை நம்பி அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்கள் பலரும் சரியான பாடம் நடத்தப்படாததால் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சில பள்ளிகளில் முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர்களே இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும் பணியில் உள்ளதாக கூறப்படும் ஆசிரியர்களும் கற்பித்தல் அல்லாத மாற்று பணிக்கு அனுப்பப்படுகின்றனர். அதாவது மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் நிர்வாக பணிகள், வீடியோ பாடம் எடுத்தல் உள்ளிட்ட மாற்றுப் பணிக்கு அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், கணிதம், வேதியியல் பாட ஆசிரியர் பணியிடம் பல மாதங்களாக காலியாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் பணியில் இருப்பதாக கூறப்படும் வேதியியல் ஆசிரியரும் மாற்றுப் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதனால் செய்முறை பயிற்சி வழங்கவும், வேதியல் பாடம் நடத்தவும் ஆசிரியர் இல்லாமல் வேறு பள்ளிக்கு மாறவும் முடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர். அதே பள்ளியில் பொருளியல் பாடத்திற்கும் ஆசிரியர் இல்லாமல் தற்காலிகமாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அரசுப்பள்ளிகளில் முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எனவே இதற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.