கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் குடிசை தரைமட்டமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கன்னந்தேரி ஜோதிடர் காடு பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மேகா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்களுடன் ரவிச்சந்திரனின் தாயாரான முத்தம்மாள் என்பவரும் இருந்துள்ளார். இந்நிலையில் ரவிச்சந்திரன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வெளியே சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த முத்தம்மாள் சமைத்து விட்டு சரியாக கேஸ் அடுப்பை அணைக்காமல் வெளியே வந்து தோட்ட வேலை செய்து கொண்டிருந்தார். அதன்பின் வீட்டில் இருந்து கரும்புகை வெளியே வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் குடிசை வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் குடிசை முழுவதும் தரைமட்டமானது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் 3 லட்ச ரூபாய் பணம், பீரோ, துணிகள் போன்ற அனைத்தும் எரிந்து நாசமாகிவிட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.