தமிழகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று சென்னையில் இருந்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனால் குடும்பத் தலைவிகள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் குடும்ப தலைவிகளுக்கான ரூ.1,000 உரிமைத்தொகை விண்ணப்பம் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் அச்சிடப்பட்ட விண்ணப்பங்களை திமுகவினர் வினியோகம் செய்து வருவதாக அதிமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
பெண்களுக்கான ரூ.1,000 வழங்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திமுகவினர் இப்படி ஸ்டாலின் பெயரில் போலி விண்ணப்பங்களை வினியோகித்து மோசடி செய்வதாக அதிமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.