மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., தனியார் நிறுவனங்களுக்கு இணையாக பல சேவைகளை வழங்கி வருகிறது. இதில் எப்.டி.டி.எச் எனும் “பைபர் நெட்” இணைப்பு வழங்குவதிலும் முன்னோடியாக விளங்குகிறது. இதற்காக பல சிறப்பு திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சென்னை பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் வி.கே.சஞ்சீவி கூறியதாவது, “பைபர் நெட் சேவையை ஊக்குவிக்க பல்வேறு முன்மாதிரி திட்டங்களுடன், சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அண்மையில் பெரும்பாலான ஓ.டி.டி., தளங்கள் அடங்கிய “சூப்பர் ஸ்டார் பிரீமியம் பிளஸ்” என்ற புதிய திட்டம் 999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பி.எஸ்.என்.எல்., பைபர் நெட் வேகமும் அதிகமாக இருப்பதால் மக்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. இதனால் சென்னை வட்டத்தில் இதுவரையிலும் 45 ஆயிரம் பைபர் நெட் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் மார்ச் மாதத்திற்குள் 75 ஆயிரம் இணைப்புகள் வழங்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். நாடு முழுவதும் இதுவரையிலும் 20 லட்சம் பைபர் நெட் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.