Categories
அரசியல் மாநில செய்திகள்

வெற்றி வாகை சூடிய முதல் திருநங்கை கவுன்சிலர் ரியா!

திருச்செங்கோடு ஒன்றியத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி பெற்றுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் 2ஆவது வார்டு ஒன்றியக் குழுவில் திமுக சார்பில் போட்டியிட்ட முதல் திருநங்கை ரியா 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இரு கட்டங்களாக டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். திருச்செங்கோடு பகுதியில் இரண்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திருநங்கை ரியா போட்டியிட்டார். இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த அவர், 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி, ”நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு 2ஆவது வார்டு ஒன்றியக் கவுன்சிலராக திமுக வேட்பாளர் திருநங்கை ரியா வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள். திருநங்கைகளுக்கு இதுபோன்ற சமூக அங்கீகாரங்கள் தொடர வேண்டும்.

மேலும், மாற்றத்திற்கு வித்திடுவதில், எப்போதும் தொடக்கப் புள்ளியாக திமுக திகழ்கிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் இவரின் வெற்றி குறித்து தென் சென்னை தொகுதி திமுக மக்களவை உறுப்பினர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட திருநங்கை ரியாவின் வெற்றி மனதிற்கு மிக உவப்பான செய்தி! சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கான அதிகாரத்தைப் பெற்றுத்தரும் இயக்கமாக நமது கழகம் திகழ்வதன் மற்றுமொரு சான்று இந்த வெற்றி. முற்போக்குச் சிந்தனையோடு வாக்களித்த வாக்காளர்களுக்கு எனது வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |