வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆறுமுகம் தனது குடும்பத்தாருடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை இவர்கள் தங்களது வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் உடனே வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவல் ஆய்வாளரின் வீட்டில் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.