மலம்புழாவில் இளைஞர் பாபு பாரை இடுக்கில் சிக்கியதன் எதிரொலியாக மலையேற்றம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா என்ற பகுதியில் செராடு மலை உள்ளது. இந்த மலையில் பாபு வயது (23) என்ற இளைஞர் மலையில் ஏறும்போது தவறி விழுந்தார். ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக பாறை இடுக்கில் சிக்கிக்கொண்டார். இதன்பின் அவரை மீட்க முதல்-மந்திரி பினராய் விஜயன் நடவடிக்கை எடுத்த நிலையில், ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தோல்வியில் முடிந்தது.
அதனை தொடர்ந்து ராணுவ வீரர்களை வரவழைத்து சுமார் 45 மணி நேர போராட்டத்துக்குப் பின் இளைஞர் பாபு மீட்கப்பட்டார்.இதற்கான செலவு ரூபாய் 1 கோடி என கேரள அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், இச்சம்பவத்தின் எதிரொலியாக இனிமேல் யாரும் மலம்புழாவில் மலையேற்றம் செல்லக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து நேற்றுமுன்தினம் இரவில் சிலர் இந்த மலையில் மலையேற்றம் செல்வதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது சிலர் தீப்பந்தத்தை வைத்து அங்கு நடந்து செல்வதைக் கண்டுபிடித்தனர். உடனே வனத்துறையினர் அவர்களை சுற்றிவளைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் வனத்துறை அதிகாரிகள் இந்த மலைக்கு செல்லும் 4 பாதைகளிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே யாரும் மலையேற்றம் செல்ல வேண்டாம் எனவும் மீறி யாராவது சென்றால் அவர்களின் மீது வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.