படகு ஓட்டுநர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி படகு இல்லத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் 6 பேர் ஒரே இடத்தில் படகில் சவாரி செய்வதற்காக குவிந்து நின்றனர். இதனை பார்த்ததும் படகு இல்ல மேலாளர் சாம்சன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரே இடத்தில் இப்படி குவிந்து நிற்கக் கூடாது என அறிவுரை கூறியுள்ளார். இந்நிலையில் துடுப்பு படகு ஓட்டுனர்கள் 20-க்கும் மேற்பட்டோர் மேலாளர் தங்களை தரக்குறைவாக பேசியதாக கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் துடுப்பு மற்றும் மோட்டார் படகுகள் இயங்காமல் அங்கேயே நின்றது. மேலும் படகில் சவாரி செய்வதற்காக டிக்கெட் எடுத்த சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்ததால் அவர்கள் செலுத்திய கட்டணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சாம்சன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன்பின் படகு ஓட்டுநர்கள் போராட்டத்தைக் கைவிட்டு படகுகளை இயக்கினார்கள்.
இதுகுறித்து படகு ஓட்டுநர்கள் கூறும், பொது மேலாளர் தரக்குறைவாக பேசியதாக நிரந்தர ஊழியர் எங்களிடம் கூறியதால் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் சாம்சன் கூறும் போது, சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக சிலர் நின்றதால் அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் வாய் தவறி பேசிய நிரந்தர ஊழியரிடம் இருந்து கடிதம் எழுதி பெறப்பட்டது எனவும் கூறினார்.