Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“இட்லி மாவில் விஷம் கலந்துவிட்டான்” கொலை செய்ய முயன்ற மகன்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

இட்லி மாவில் விஷம் கலந்து மகன் பெற்றோரை கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறுவை கிராமத்தில் விவசாயியான தங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனக்கோடி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிப்பதற்காக வந்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்களுக்கு தமிழரசன், மோகன்தாஸ் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் தமிழரசன் சென்னையில் வசித்து வருகிறார். எங்களுக்கு சொந்தமான 2 1/2 ஏக்கர் விவசாய நிலத்தில் மோகன்தாஸ் தற்போது விவசாயம் செய்து வருகிறார்.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக மோகன்தாஸ் எங்களுக்கு சரியாக உணவு அளிக்காமல் பட்டினி போடுவதோடு, விவசாய நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதிக் கொடுக்கும்படி கேட்டு அடித்து துன்புறுத்தி வருகிறார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் காவல்நிலையத்தில் புகார் அளித்ததால் கோபமடைந்த மோகன்தாஸ் இட்லி மாவில் பூச்சி மருந்தை கலந்துள்ளார்.

மேலும் இதுகுறித்து கேட்ட போது சொத்துக்களை எனக்கு எழுதி தராத நீங்கள் எதற்காக உயிரோடு இருக்க வேண்டுமென தகராறு செய்கிறார். இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே எங்களது மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தம்பதியினர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த பிறகு தம்பதியினர் அங்கிருந்து சென்றனர்.

Categories

Tech |