கடலூரில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட தகராறில் அதிமுக நிர்வாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியை அடுத்த எத்தனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் காந்தாராவ். இவர் நெய்வேலி என்எல்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அருள் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இவ்வாறு இருக்கையில் நேற்றையதினம் புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் அருள் காந்தாராவின் வீட்டிலுள்ள மேஜையை அவரது அனுமதி இன்றி எடுத்து வந்து கேக் வெட்டியதோடு மட்டுமல்லாமல் ஒலிபெருக்கிகளில் சத்தத்தை அதிகமாக வைத்து தனது நண்பர்களான சதீஷ்குமார், ரஞ்சித் ஆகியோருடன் நடனமாடியுள்ளார்.
இதனால் எரிச்சலடைந்த அவர் சத்தத்தை ஏன் இவ்வளவு அதிகமாக வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டதோடு மட்டுமல்லாமல் மேஜையும் தூக்கிக் கொண்டு தனது வீட்டிற்கு செல்ல முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் ரஞ்சித் அருள் ஆகிய மூவரும் அவரிடம் தகராறு செய்தனர். தகராறு முற்ற மூவரும் கூறிய கற்களால் வீசியும் கட்டையால் தாக்கி காந்தராவை காயம் அடைய செய்தனர். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின் அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். வீட்டிற்கு வந்தவுடன் மீண்டும் மயக்கம் வருவதாக கூற அவரை மீண்டும் அரசு மருத்துவமனைக்கு குடும்பத்தினர் மற்றொருமுறை அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவர் எவ்வித சிகிச்சை பலனுமின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அதிகாரிகளும் ரஞ்சித் சதிஷ் அருள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த காந்தாராவ் அதிமுகவின் முக்கிய நிர்வாகி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.