பெண் தனது 2 மகன்களை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள கே.மோரூர் லேண்ட் காலனி பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரகதம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு செல்வகணபதி, கோகுலக்கண்ணன் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் பிரபாகரன் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் பிரபாகரனுக்கும் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக மரகதம் சந்தேகபட்டதாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த மரகதம் தனது 2 மகன்களுடன் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இதனை அடுத்து தோட்டத்தில் இருக்கும் விவசாய கிணற்றில் மரகதத்தின் செருப்பு மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு இடுப்பில் கயிற்றால் கட்டிய நிலையில் மரகதத்தின் சடலத்தை மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு செல்வகணபதி மற்றும் கோகுலகண்ணன் ஆகியோரின் சடலங்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அதன்பின் காவல்துறையினர் 3 பேரின் சடலங்களையும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மரகதம் தனக்கு நீச்சல் தெரியும் என்பதால் உடலில் கல்லை கட்டிக்கொண்டு இரண்டு மகன்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.