புதுப்பெண் தாலியை கழற்றி வைத்துவிட்டு வீட்டை விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சீம்பளம் கிராமத்தில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சென்னை அருகில் உள்ள அரண்வாயன் கிராமத்தில் வசிக்கும் ஜெயஸ்ரீ என்பவருக்கும் கடந்த 6-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் யுவராஜ் கம்பெனி வேலைக்கு வழக்கம்போல் சென்றுவிட்டார். இதனையடுத்து யுவராஜின் அண்ணன் லோகநாதன் இவருக்கு பகல் 3 மணியளவில் செல்போனில் தொடர்பு கொண்டு உன்னுடைய மனைவியை காணவில்லை என தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் வீட்டிற்கு உடனடியாக வந்த யுவராஜ் மனைவியை தேடினார். ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து வீட்டில் ஒரு கடிதம் இருந்தது. அதில் எனக்கு இந்த திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை என எழுதப்பட்டிருந்தது. மேலும் கடிதம் அருகில் தாலி செயினும் இருந்தது. இந்நிலையில் ஜெயஸ்ரீ கடிதம் எழுதிவிட்டு தாலியை கழற்றி வைத்து விட்டு வீட்டை விட்டு சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து யுவராஜ் பிரம்மதேசம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.