டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கடந்த ஆண்டு இறுதியில் குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பிப்ரவரி மாதம் தற்போது நடைபெற்று கொண்டிருப்பதால் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அரசு பணிகள் தேர்வாணைய தலைவர் இந்த மாதம் குரூப்-2, 2ஏ தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும் குரூப்-2, 2ஏ தேர்வில் 5831 காலிப்பணியிடங்களும், குரூப் 4 தேர்வில் 5,255 காலிப்பணியிடங்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் அறிவிப்பு வெளியான 75 நாட்களுக்குள் தேர்வு நடத்தி முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ் மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விதமாக தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே தேர்வர்கள் தமிழ் மொழி தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அவர்களுடைய வினாத்தாள் மதிப்பீடு செய்யப்படும். மேலும் தேர்வாணைய தலைவர் இந்த ஆண்டு 32 வகையான தேர்வுகள் நடத்தப்படும் என்றும், விரைவில் தேர்வு அறிவிப்பு வெளியாகி 75 நாட்களுக்குள் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.