மின்சார ரயில் மோதியதால் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்து சென்ற தொழிலாளி உடல் துண்டாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயில் தந்தை பெரியார் நகரில் கட்டிட தொழிலாளியான பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு செல்வதற்காக திருமுல்லைவாயல் ரயில் நிலையம் அருகே செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளார். அப்போது மின்சார ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. இதனை பார்த்த பயணிகள் மின்சார ரயில் வருவதாக கூச்சலிட்டனர். ஆனால் பழனி அதை கவனிக்காமல் செல்போனில் பேசியபடி சென்றதால் சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி வேகமாக சென்ற மின்சார ரயில் அவர் மீது பயங்கரமாக மோதியது.
இதனால் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.