உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்டும் அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டும் வரும் நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனையின் போது, பொன்னையன், மைத்ரேயன், தமிழ்மகன் உசேன், நிர்மலா பெரியசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக செய்தி தொடர்பாளார் பொன்னையன், “தற்போது தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி அமைதியாக நடைபெற்று வருகிறது.
இந்த நேரத்தில் வன்முறையை ஆங்காங்கே உருவாக்கி, அலுவலர்களை மிரட்டி திமுக வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகிறது. திமுக தங்களுக்கு வெற்றி கிடைக்காது என்ற காரணத்தினால்தான் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் சென்றனர். ஆனால், திமுகவின் முயற்சிகள் அனைத்தும் தோற்றன. கிராம, உள்ளாட்சிப் பகுதிகளில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அதிமுக ஆரம்பம் முதலே உள்ளாட்சித் தேர்தலைச் சிறப்பாக நடத்தி வந்தது.
தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட நீதிமன்றம் செல்கிறார் ஸ்டாலின். அரசியல் சூழ்ச்சியர்கள் கூட யாரும் இப்படி நினைக்க மாட்டார்கள். ஆனால் திமுகவைச் சேர்ந்தவர்கள் இப்படி மக்கள் நகைக்கும் அளவிற்கு செய்து வருகின்றனர். இதற்கு முன்பாக உள்ளாட்சித் தேர்தலில் பல பிரச்னைகள் வந்தபோது திமுக கொடுமையான முறையில் கையாண்டு உள்ளனர்.
ஆனால் இப்போது அப்படி ஏதும் நடக்கவில்லை. சத்தியத்தோடு இந்தத் தேர்தலை நடத்தி வருகிறோம். சட்டம் ஒழுங்கில் சிறப்பாக இருக்கிற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. காலையிலிருந்தே பொய்யான குற்றச்சாட்டை கூறி வரும் ஸ்டாலின், சந்திர மண்டலத்தில் உள்ள எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் போல் பேசி வருகிறார்.
வாக்கு எண்ணிக்கை இரவு 10 மணியைத் தாண்டி சென்ற வரலாறு உண்டு, தற்போது வாக்குச் சீட்டு முறையில் தேர்தலை நடத்தியுள்ளோம். எனவே, நேரம் ஆகத் தான் செய்யும். அதிமுக ஆட்சி மீண்டும் வந்துவிடுமா என்கிற அச்சத்தில் ஸ்டாலின் இப்படி நடந்து கொள்கிறார்.
மாநகராட்சித் தேர்தலின்போது ஒரு மணி நேரத்தில் வெற்றி என்று ஸ்டாலின் செய்த வன்முறை போல் அல்லாமல் தேர்தல் ஆணையம் சட்டத்திற்கு உட்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்திடம் அதிமுக தரப்பிலும் திமுக மீது புகார் கொடுக்கவுள்ளோம்” என்றார்.