திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் அரசு பேருந்துகளில் இலவச பயணம், பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரண நிதி என பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் முக்கியமான சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மக்களுக்கு திமுக மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதில் குறிப்பாக பெட்ரோல் விலையை ரூ. 5 ஆக குறைப்போம் என்று கூறியிருந்த நிலையில் தற்போது ரூ.3 மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.
டீசல் விலையும் குறைக்கப்படவில்லை. கல்விக்கடன் ரத்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதேபோல் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடியில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்படாததால் பெண்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக அரசு கஜானாவை துடைத்து விட்டு சென்ற நிலையில் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகள் நிதியமைச்சர் பழனிவேல் ஜாதகனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
எனவே தமிழகத்தில் நிதி நிலைமை சீரானால் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். எனவே நிதியமைச்சர் அதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 திட்டத்திற்கு பதிலாக மாற்று திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முதியோருக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அதில் பல்வேறு நிபந்தனைகள் உள்ளது.
எனவே இந்த நிபந்தனைகள் அனைத்தையும் நீக்கி விட்டு 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் யார் விண்ணப்பித்தாலும் உதவி தொகையை வழங்கலாம் என்ற திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாம். மேலும் அரசும் இதற்கு சம்மதித்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கோட்டை வட்டாரத்தினர் உறுதியாக கூறுகின்றனர்.