தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க.,- காங்.,- இந்திய கம்யூ., – மார்க்சிஸ்ட் கம்யூ., – வி.சி., – ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தும், அ.தி.மு.க., சிறிய கட்சிகளுடன் சேர்ந்தும் போட்டியிடுகின்றன.
இதையடுத்து பா.ஜ., – பா.ம.க., – தே.மு.தி.க., – மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. அதன்பின் உள்ளூர் மக்களின் ஆதரவுடன் வெற்றிப் பெறுவதற்கு சுயேச்சைகளும் அதிகளவில் களம் இறங்கியுள்ளனர். இதனிடையில் தேர்தல் பிரசாரம் ஒரு வாரத்திற்கு மேலாக பரபரப்புடன் நடைபெற்று வருகிறது.
இதில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதனை தொடர்ந்து அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வழக்கம் போல ஊர் ஊராக சுற்றுப் பயணம் மேற்கொண்டு , பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, நாளை (பிப்..17) மாலை 6:00 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்துவிடும்.
இதனால் இறுதிகட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். இதனிடையே பிரசாரம் ஓய்ந்ததும், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகம் நடக்க வாய்ப்புள்ளது. தற்போது சில இடங்களில் பரிசு பொருட்கள் விநியோகம் தொடங்கி உள்ளது. அதனை தடுக்கும் அடிப்படையில் பிரசாரம் முடிந்ததும் 144 தடை உத்தரவை பிறப்பிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்..