தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள், பல பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சிகள், பல்கலைக்கழக பணியாளர்களுக்கான மருத்துவம் காப்பீட்டுத் திட்டத்தில் ரூபாய் 4 லட்சம் வரை மருத்துவ சிகிச்சைகள் பெறும் வசதி மற்றும் குறிப்பிட்ட சில நோய்களுக்கான அறுவை சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு ரூபாய் 10 லட்சம் வரை காப்பீடு பெறும் வசதி இருக்கிறது. தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி வாயிலாக செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தில் காப்பீடு கட்டணம் ஆக அரசு ஊழியர்களுக்கு ரூ.300 பெறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் புற்றுநோய் அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை மற்றும் புற்றுநோய் கட்டிகளில் நோய் தடுப்பாற்றல் சிகிச்சை, கல்லீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, சிக்கலான இதய அறுவை சிகிச்சை, இதய மாற்று அறுவை சிகிச்சை, விபத்து, இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சை போன்றவற்றிற்கான மருத்துவ சிகிச்சை பெற நிதி உச்சவரம்பு ரூபாய் 10 லட்சம் ஆகும்.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா தாக்கம் கடந்த 2 ஆண்டுகளாக அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், மக்கள் சேவைக்காக எந்தவித அச்சமும் இன்றி அரசுப் பணியாளர்கள் வேலை பார்த்து வந்தனர். அந்த நேரத்தில் அரசு ஊழியர்கள் தான் கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்தனர். இதன் காரணமாக அரசு ஊழியர் சங்கம் சார்பாக கொரோனாவுக்கான சிகிச்சை செலவுகளை, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உயர் சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை கருத்தில் கொண்டு உயர் சிகிச்சைப் பிரிவில் கொரோனா தொற்று சிகிக்சை சேர்க்கப்பட்டு இருப்பதாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது..