பயிர் கடன் மற்றும் நகை கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன்பு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மலைவாழ் மக்களுக்கு வழங்கப்பட்ட பயிர் கடன், நகை கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் துணைத் தலைவர் பழனிசாமி தலைமை தாங்கியுள்ளார்.
இதனையடுத்து மாவட்ட செயலாளர் கந்தசாமி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சின்னசாமி மற்றும் சங்க நிர்வாகிகள் என பலரும் பங்கேற்றனர். மேலும் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், ஜப்தி நடவடிக்கையை கைவிட கோரியும் கோஷங்கள் எழுப்பியதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.