கரும்பு தோட்டம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள கரும்பு எரிந்து சேதமடைந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கொளக்காட்டுப்புதூர் பகுதியில் பாலசுப்பிரமணி (வயது 63) என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் தனது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டு வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கரும்பு தோட்டம் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலசுப்பிரமணி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயற்சித்தும் பலன் அளிக்காததால் உடனடியாக வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரும்பு தோட்டத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர். ஆனாலும் இந்த விபத்தில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கரும்புகள் எரிந்து சேதம் அடைந்ததால் பாலசுப்பிரமணி மிகுந்த வேதனை அடைந்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.