தைலாராமன் மலைப்பகுதியில் திடீரென தீ பற்றியதால் வனப்பகுதியில் இருந்த மூலிகை செடிகள் எரிந்து சேதமடைந்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு கொண்ட தைலாராமன் மலை உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென மலை கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது. இந்த தீ வேகமாக பரவிய நிலையில் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கும் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தால் வனப்பகுதியில் இருந்த அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகளும் எரிந்து சேதம் அடைந்துள்ளது.
இதனை அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வனப்பகுதியில் எறிந்த தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது பனிக்காலம் என்பதால் குளிரின் தாக்கத்தை போக்க யாரேனும் நெருப்பு மூட்டிவிட்டு அதனை அணைக்காமல் சென்றதால் விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.