தமிழகத்தில் கடந்த முறை சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் திமுக, நாங்க ஆட்சி பொறுப்பேற்றால் ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1,000 உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
ஆனால் ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆகியும் இந்த அறிவிப்பு குறித்து தமிழக அரசு இதுவரையிலும் எந்த உத்தரவையும் வெளியிடவில்லை. இதன் காரணமாக ஆளுங்கட்சி மீது எதிர்கட்சி தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருகிறது.
அதாவது பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டீர்கள் என்றெல்லாம் கடும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. தற்போது நகர்புற தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக, பாஜக கட்சிகள் இதனை விமர்சித்து வருகின்றன. ஒரு சில வாக்குறுதிகளை மட்டுமே திமுக நிறைவேற்றியுள்ளதாகவும், நீட் ரத்து, மகளிருக்கான ரூபாய் 1,000 உரிமைத் தொகை உள்ளிட்ட பல வாக்குறுதிகளை திமுக இதுவரையிலும் நிறைவேற்றவில்லை என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து சொல்லி வருகின்றன. இந்த நிலையில் தான் கடந்த 13ஆம் தேதி திண்டுக்கல் பிரச்சாரக் கூட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பெண்களுக்கு உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கப் போகிறோம் என்றும் யாரையும் ஏமாற்ற மாட்டோம் என்றும் முதல்வர் உறுதி அளித்தார். இதற்கிடையே உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் என்று முதல்வர் ஸ்டாலின் படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் விநியோகித்து வருவதற்கு அரசியல் கட்சியினர் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர். இதுவரை திட்டமே அறிவிக்கவில்லை, அதற்குள் விண்ணப்பமா..? என்று கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 உரிமை தொகைக்கான விண்ணப்பம் எதுவும் தரவில்லை என்று தமிழக அரசு விளக்கம் கொடுத்தது.
இந்நிலையில் சாத்தூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், விரைவில் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1,000 வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளார். அதாவது, தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் 1000 ரூபாய் வழங்கப்படும். குடும்பத்தலைவர் வந்து கேட்டால் அவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. ஆகவே குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டம் 2 மாதங்களில் தொடங்கப்படும். மேலும் சாத்தூர் பகுதியில் தி.மு.க. ஆட்சியில்தான் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாளச்சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டு உள்ளது. இதனால் அனைவரும் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.