மக்கள் தீர்ப்பை தலை வணங்கி ஏற்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணி முதல் விடிய விடிய எண்ணப்பட்டு வருகின்றது.
வாக்கு எண்ணப்படும் மையங்கள் முழுவதும் 30354 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக , அதிமுக என மாறி மாறி சரிக்கு சமமான இடங்களை பெற்ற நிலையில் தொடர்ந்து 25 மணி நேரம் கடந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.
தற்போதைய நிலவரப்படி :
ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக – 2,171 இடங்களிலும் , அதிமுக 2061 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. அதே போல மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 259 இடங்களிலும் , அதிமுக 237 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில் , ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம் என்று தெரிவித்தார்.