சிறுத்தை குட்டி ஒன்றின் தலையில் பிளாஸ்டிக் கேன் மாட்டிக் கொண்ட துயரச் சம்பவம் மகராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. சிறுத்தை குட்டி ஒன்று அங்கு உள்ள வனப்பகுதியில் தலையில் ஒரு பிளாஸ்டிக் டப்பா மாட்டிக்கொண்ட நிலையில் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தது. இது பத்லாபூர் கிராமத்துக்கு அருகே தென்பட்ட நிலையில், அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இந்நிலையில் அந்த சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். சுமார் இரண்டு நாட்களுக்குப் பின் அதற்கு மயக்க ஊசி போட்டு பிடித்து, அதன் தலையில் இருந்த பிளாஸ்டிக் டப்பாவை அகற்றினர்.
இதனால் அந்த சிறுத்தை சுமார் 48 மணி நேரத்துக்கும் மேலாக குடிநீர், உணவு இன்றி தவித்து வந்தது. இதனை அடுத்து அதை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சஞ்சய் காந்தி தேசிய உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு, அது தானாக நடக்க ஆரம்பித்ததும் வனப்பகுதியில் விடப்பட்டது. இந்த நிலையில் ஏதோ ஒரு விலங்கு தானே என்று விட்டு விடாமல் விலங்குகள் நல வாரிய அமைப்பினரும், வனத்துறையினரும், உள்ளூர் நிர்வாகிகள் என சுமார் 30-க்கும் மேற்பட்டோர் ஒன்றாக சேர்ந்து அந்த சிறுத்தை குட்டியை இந்த துயரத்திலிருந்து விடுவித்துள்ளனர்.