நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர்.
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 291 இடங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்பதற்காகவும் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவும் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்து மாணிக்கம் தலைமையில் மற்ற போலீசார் கலந்துகொண்ட கொடி அணிவகுப்பு விழா நடைபெற்றது.
இந்த கொடி அணிவகுப்பு விழா ஊட்டி தாவரவியல் பூங்கா சாலை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு கமர்சியல் சாலை, லோயர் பஜார் வழியாக மத்திய பேருந்து நிலையத்தில் வந்து முடிவடைந்தது. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுபோக குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் இந்த கொடி அணிவகுப்பு விழா நடைபெற்றுள்ளது.