கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் அரியானா மாநில அரசு அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா பரவலின் பாதிப்பு தொடர்ந்து படிப்படியாக குறைந்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகளை தளர்த்தி அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது, கடந்த ஆண்டு ஜனவரி 21 முதல் பரவலின் வேகம் குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் 50 ஆயிரம் என பதிவான கொரோனா தொற்று நேற்றைய நிலவரப்படி 27 ஆயிரமாக குறைந்துள்ளது.
மேலும் தொற்று உறுதியாகும் வீதம் 3.56 சதவீதமாக குறைந்துள்ளது. இந்நிலையில் மாநில அரசுகள் விதித்துள்ள கூடுதல் கட்டுப்பாடுகளால் மக்களின் பொருளாதார நடவடிக்கைகளை பாதிக்கக்கூடாது எனவும் அதே நேரத்தில் தொற்று உறுதியாகும் வீதத்தையும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
மேலும் பரிசோதனை, தொற்று உறுதியானவர்களை கண்டுபிடித்தல், சிகிச்சை, தடுப்பூசி போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அரியானாவில் உள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அரியானா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று முதல் முன்பு வெளியிடப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குவதாக உத்தரவு வழங்கியுள்ளது.