உத்தரப்பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் அவர் கூறியதாவது, “எனது குடும்பத்தினர் இந்த நாட்டுக்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். ஆனால் அதனை பாஜகவினர் கொச்சைப் படுத்துகின்றனர். எங்கள் குடும்பத்தினரின் தியாகங்கள் பற்றி நாங்கள் ஒரு நாளும் தம்பட்டம் அடிப்பது இல்லை. ஆனால் பாஜகவினர் எங்களை பேசும்படி வைக்கின்றனர். நாட்டுக்காக சேவையாற்றிய போதும் நாட்டுக்காக பணியாற்றிய போதும் உயிர்த் தியாகம் செய்தவர்கள் எங்கள் குடும்பத்தினர்.
ஆனால் அதனை இந்த பாஜகவினர் கொச்சைப் படுத்துகின்றனர். தியாகம் என்றால் என்ன என்று கூட பாஜகவுக்கு தெரியாது. இவர்களது பேச்சு எல்லாம் தேர்தல் தொடங்கி அது முடியும் வரை தான். தேர்தல் சமயத்தில் மட்டும் உத்தரப்பிரதேசம் வருவார்கள், பஞ்சாப் வருவார்கள், கோவா வருவார்கள். தேர்தல் முடிந்த பின்னர் அமெரிக்கா, இங்கிலாந்து என வெளிநாடுகளுக்கு பறப்பார்கள். ஒரு நாட்டின் பிரதமருக்கு 16 ஆயிரம் கோடிக்கு இரண்டு விமானங்கள் வாங்கப்பட்டுள்ளது என்பது இதுவே முதல் முறையாக இருக்கும். பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியாருக்கு விற்பனை செய்தனர். காங்கிரஸ் கட்சியினர் என்ன செய்தார்கள்.? என கேட்கிறீர்களே நீங்கள் விற்பனை செய்யும் அத்தனை பொதுத்துறை நிறுவனங்களையும் உருவாக்கியவர்கள் காங்கிரஸ் கட்சியினர் தான் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.!” என அவர் கூறினார்.