மருமகனை மாமனார் அரிவாளால் வெட்டி உயிருடன் எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் மின் நிலைய ஊழியரான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஷாந்தி என்ற மகள் உள்ளார். கடந்த 8 மாதத்திற்கு முன்பு நிஷாந்தி முகநூல் மூலம் அறிமுகமான கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மக்புல் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு நிஷாந்தி தனது கணவருடன் கர்நாடக மாநிலத்தில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜேந்திரனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நிஷாந்தி தான் மிகவும் கஷ்டப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் தனது மகள் மற்றும் மருமகனை ஊருக்கு வரவழைத்து அனுபரத்தில் இருக்கும் ஊழியர் குடியிருப்பில் தங்க வைத்துள்ளார். இந்நிலையில் நரசங்குப்பத்தில் இருக்கும் வீட்டில் மக்புல் வெட்டுக் காயங்களுடன் எரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராஜேந்திரன் தனது மருமகனை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
அதன்பின் காவல்துறையினர் ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கூறியதாவது, எனது மகளை திருமணம் செய்த பிறகு மக்புல் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இதனை எனது மகளும் நானும் பலமுறை கண்டித்தோம். ஆனாலும் அவர் அதனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டுள்ளார். இதனால் நரசங்குப்பத்தில் இருக்கும் எனது வீட்டில் வைத்து மக்புலை வெட்டினேன். அதன்பிறகும் அவர் இறக்காததால் உயிருடன் பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொன்றேன் என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.